மணிக்கொடிக் காலத்தில் சிறுகதை வளர்ச்சி

தமிழ்ச்‌ சிறுகதையின்‌ வரலாற்றில்‌ மணிக்கொடிக்‌ குழுவினருக்கு நிரந்தரமான ஓர்‌ இடமுண்டு. சிறுகதையின்‌ பன்‌முகப்பட்ட வளர்ச்சிக்கு இப்‌பத்திரிகையோடு சம்பந்தப்‌பட்டவர்கள்‌ பெருந்தொண்டாற்றியுள்ளனர்‌.

குறிப்‌பிட்ட ஒர்‌ இலட்சியத்திற்காகக்‌ தோன்றிய எந்தச் சஞ்சிகையிலும், தமது முழுக்‌ கருத்தையும்‌ கொட்டுவர்‌. பத்திரிகையின்‌ வாழ்வு பாதிக்கப்பட்டாலும்‌ கருத்து வெளிப்பாட்டில்‌ சிறிதும் தளர்ச்சியைக்‌ காட்டார்‌. பத்திரிகைக்கு வேண்டிய பொருளாதார நிலைபற்றிப்‌ பெரிதும்‌ சிந்தியார்‌. இந்தக்‌ காரணங்களால்‌  சில பத்திரிகைகள்‌ மடிந்துவிடுவது வழக்கம்‌. ஆங்கிலச்‌ சஞ்சிகையான “Scrutiny” முதல்‌ தமிழ்ச்‌ சஞ்சிகையான “சரஸ்வதி” வரை இவ்வுண்மை எங்கும்‌ காணப்படும்‌. மணிக்கொடியும்‌ இத்தகைய ஓர்‌ ஏடே.

காந்தி, சுதந்திரச்‌சங்கு போன்ற பத்திரிகைகளில்‌ சிறுகதைகள்‌ இடம்‌ பெற்றனவெனினும்‌, அவை இலக்கிய சோதனையைத்‌ தம்‌ முக்கிய நோக்கங்களில்‌ ஒன்றாகக் கொள்ளவில்லை. மணிக்கொடியே இவ்விலட்சியத்துடன்‌ தோன்றிய முதல்‌ பத்திரிகை.

“முழுக்க முழுக்க அரசியல்‌ விஷயங்களையே வெளியிட்டு வந்த காலத்தில்‌ மணிக்கொடிப்‌ பத்திரிகை அரசியலை மட்டுமல்லாமல்‌ இலக்கியத்தையும்‌ வளர்க்க எண்ணிப்‌ பிறந்தது. இதனால்தான்‌ மணிக்கொடிப்‌ பத்திரிகைக்காரர்கள்‌ தங்கள்‌ பத்திரிகையைத்‌ 'தமிழ்நாட்‌டின்‌ வெள்ளி முளைப்பு' என்றார்கள்‌.” - ரகுநாதன்‌-புதுமைப்‌பித்தன்‌ வரலாறு

1934-இல்‌ தோன்றிய மணிக்கொடிக்குப்‌ பொறுப்பாசிரியராக கே. சீனிவாசன்‌ என்பவர்‌ இருந்தார்‌. வ.ரா. அவருக்குத் துணையாகவிருந்தார்‌. பி. எஸ்‌. ரரமையா, நா. பிச்சமூர்த்தி, பெ.கோ. சுந்தரராஜன்‌, புதுமைப்பித்தன்‌ முதலியோர்‌ அதில்‌ எழுதினர்‌.

மணிக்கொடியின்‌ பொருளாதாரம்‌ பலமற்றதாகவே இருத்தது. 1934-ஆம்‌ வருடத்தின்‌ பிற்கூற்றில்‌ காந்தி எனும்‌ சஞ்சிகையுடன்‌ மணிக்கொடி இணைக்கப்பட்டது. காந்தி ஆசிரியா்‌ பி எஸ்‌ சொக்கலிங்கம்‌ மணிக்கொடி நிர்வாகத்தில்‌ முக்கியஸ்தரானார்‌. பி.எஸ்‌. ராமையாவும்‌ புதுமைப்‌ பித்த னும்‌ பத்திரிகை நடத்தப்படுவதற்கு உதவினர்‌. ஆனால்‌ சிறிது காலத்திற்குள்‌ முக்கியமான மூவரும்‌ மணிக்கொடியை விட்டு விலகினர்‌. முக்கியமான மூவரும்‌ விலகியமை மணிக்கொடியின்‌ நிர்வாகத்தையும்‌, அமைப்பையும்‌ பெரிதும்‌ பாதித்தது. 

அரசியல்‌ ஆர்வம்‌ கொண்டிருந்த வ.ரா.வும்‌ டி.எஸ்‌.சொக்கலிங்கமும்‌ விலகியவுடன்‌ மணிக்கொடியில்‌ அரசியல்‌ விமர்சனங்கள்‌ பெற்றிருந்த இடத்தையும்‌ இழந்தன. பின் அது முற்றிலும்‌ இலக்கியச்‌ சஞ்சிகையாக, சிறப்பாக, சிறுகதைப்‌ பத்திரிகையாகிற்று. இலக்கிய விழிப்புணர்வு பொது மக்களிடத்தே ஏற்படாதிருந்த அக்காலத்தில்‌ இலக்கியத்‌திற்கென ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது அசாத்‌தியமான செயல்‌. 

பத்திரிகை அளவில்‌ குறுகிற்று. மாதமிருமுறை வெளியாகும்‌ பத்‌திரிகையாயிற்று. அடிக்கடி வெளிவராதுமிருந்தது. இறுதியில்‌ 1926ஆம்‌ ஆண்டு நிறுத்தப்பட்டது.

மணிக்கொடியின்‌ இரண்டாவது காலப்‌பிரிவான இக்‌காலத்திலேயே கு.ப. ராஜகோபாலன்‌, சி.சு. செல்லப்பா, இளங்கோவன்‌, சிதம்பர சுப்பிரமணியம்‌, பி.எம்‌. கண்ணன்‌, மெளனி முதலியோர்‌ எழுதினர்‌. மீண்டும்‌ 1927-இல்‌ மணிக்கொடி. புத்துயிருடன்‌ வெளிவந்தது. நிதிப்பலத்துடன்‌ சஞ்சிகை ஆரம்பித்தனர்‌. இலக்‌கியத்துறையில்‌ ஆர்வங்கொண்ட பொருள்முறை வாய்ப்புகள்‌ உள்ள பிரமுகர்‌ பலரின்‌ உதவியுடன்‌ நவயுகப்‌ பிரசுராலயம்‌ எனும்‌ வரையறுக்கப்பட்ட நிறுவனத்தைத்‌ தோற்றுவித்தனா்‌. மணிக்கொடியும்‌ வெளியிடப்பட்டது. 

டி. எஸ்‌. சொக்கலிங்கத்தைப்‌ பொறுப்பாளராகக்‌ கொண்ட இந்நிறுவனத்தின்‌ நிருவாக ஆசிரியராகப்‌ பி.எஸ்‌.ராமையா கடமையாற்றினார்‌. ஆனால்‌ சிறிது காலத்தின்‌ பின்னர்‌, ப. ராமஸ்வாமி, பிரசுராலயத்தின்‌ பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டார்‌. பி. எஸ்‌. ராமையாவுக்கும்‌ அவருக்கும்‌ கருத்து முரண்பாடும்‌, தகராறும்‌ ஏற்படவே ராமையா விலக்கப்பட்டார்‌. அத்துடன்‌ மணிக்கொடிக்‌ குழுவினர்‌ என்று கூறப்படுபவர்களுக்கும்‌ மணிக்கொடிக்குமிருந்த உறவு அற்றுப்போயிற்று. தக்க எழுத்தாளர்‌ பலம்‌ இல்லாது போனமையால்‌, நவயுகப்‌ பிரசுராலயமும்‌ சிறிது காலத்தின்‌ பின்னா்‌ கைவிடப்பட்டது.

இந்திய சுதந்திரத்தின்‌ பின்னர்‌ பி. எஸ்‌. ராமையா மணிக்கொடியை அதே இலட்சிய முறையில்‌ நடத்த முயன்றார். முற்றிலும்‌ மாறுபட்ட சூழ்நிலையில்‌ அதனால்‌ வாழ முடியவில்லை.

மணிக்கொடியில்‌ எழுதி வந்தவர்கள்‌ மணிக்கொடியின்‌ மறைவின்‌ பின்னர்‌ வேறு பல பத்திரிகைகளில்‌ கடமையாற்‌றியும்‌ எழுதியும்‌ வந்தனர்‌. அவற்றுள்‌ முக்கியமானவை கிராம ஊழியன்‌, சந்திரோதயம்‌, சூராவளி, கலாமோகினி, தேனீ போன்றவையாம்‌.

மணிக்கொடிப்‌ பத்திரிகை சிறுகதைத்துறைக்காற்றிய சேவையே இங்கு முக்கியமானதாகும்‌. முதன்முதலில்‌ நிறுவன ரீதியாகப்‌ புனைகதை வளர்ச்சிக்கு இடம்‌ கொடுத்தது மணிக்கொடி. அக்காலத்திருந்த சூழ்நிலையில்‌ பிற பத்திரிகைகளினால்‌ கவனிக்கப்படாதிருந்த இலக்கியப்‌ பரிசோதனைகளை நடத்துவதற்குக்‌ களமாக இருந்தது மணிக்கொடியே. 

மணிக்கொடி தமிழ்ச்சிறுகதை வரலாற்றின்‌ மிகமுக்கியமான ஒரு கட்டமாகும்‌. தமிழ்‌ இலக்கியப்‌ பரப்பில்‌, தமிழுக்கு அணி செய்யும்‌ இலக்கிய ஆக்கங்களில்‌, சிறுகதையும்‌ இடம்‌பெறத்‌ தொடங்குவது மணிக்கொடிக்‌ காலத்திலேயே. தமிழின்‌ இலக்கியச்‌ செல்வங்கள்‌ என்று கூறத்தக்க சிறுகதைகள்‌ தோன்றியதற்குக்‌ காரணமாக அமைந்தது மணிக்கொடி.