சிறுகதையின் வரையறையும் இலக்கணமும்

சிறுகதை அளவில் சிறிதாக இருக்க வேண்டும். அது, ஒரே அமர்வில் படித்து முடித்துவிடக் கூடியதாக இருக்க வேண்டும். அரைமணி முதல் இரண்டு மணிநேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியது சிறுகதை என்பார் எட்கர் ஆலன்போ. அதேப் போன்று, நாவலின் சுருக்கமாக சிறுகதையைக் கொள்ள முடியாது. சிறுகதை என்பது தன்னளவில் முழுமை பெற்ற ஒரு தனி இலக்கிய வடிவம்.

எந்த உணர்ச்சியை அல்லது கருத்தை அது தன்னகத்தே கொண்டிருக்கிறதோ, அதைப் படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் பாய்ச்சும் ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும். குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல் வேண்டும் என்பார் செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னமரம் என்பார் இராசாசி.

கதையை உருவாக்குவதில் கதாசிரியரின் கலையாற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் சொல்ல விரும்பும் செய்தி இவ்வளவும் இலக்கண வரம்புகளை விடவும் மிகமிக முக்கியமானவை. சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எந்த இலக்கணத்தையும் மனத்தில் நினைத்துக் கொண்டு எழுதுவதில்லை. அவர்களின் எழுத்துகள் தாமாகவே சிறுகதை வடிவம் பெற்றுவிடுகின்றன.