இலக்கியத்தின் மிக முக்கியமான பகுதியாக இன்று புனைகதை என்பது உள்ளது. புனைகதை (Fiction) என்ற சொல்லில், சிறுகதை, குறுநாவல், நாவல் போன்ற கதைப் படைப்புகள் எல்லாமே அடங்கும். கதை எனக் கூறும்போது அக்காலப் பண்டிதர்கள் மனத்தில் எழுந்த, இன்றைக்கும் பலபேரின் மனங்களில் எழுகின்ற மிக முக்கியமான கேள்வி, 'ஏன் இவற்றைப் படிக்கவேண்டும்' என்பதுதான். எத்தனையோ வகையான அறிவுநூல்கள் நமக்காகக் காத்திருக்கும் போது, அவற்றை வாசிப்பதற்கே நேரம் பற்றாக் குறையாக இருக்கும் போது, கதைகளை வாசிப்பானேன்?
சென்ற நூற்றாண்டின் முற்பாதிவரை கதைகளை பல்கலைக்கழகங்களின் தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கே மிகவும் யோசித்து வந்தார்கள். கதைகள் பொழுது போக்கிற்கானவை மட்டுமே என்ற எண்ணம் நிலவிவந்தது. அவை படிப்பவர்கள் மனத்தைக் கெடுத்துவிடும் என்ற எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதிவரை பழைய கல்விமான்கள் மனத்தில் இருந்துவந்தது. 1970களின் தொடக்கத்தில் தான் தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் சிறுகதைகள் நாவல்கள் போன்றவற்றையும் சேர்க்கலாம் என்னும் எண்ணம் உருப்பெற்றது.
கதைகள் கற்பனையாக உருவாக்கப்படுபவைதாம். நாட்டுப்புறக் கதைகளாக இருந்தாலும், இன்று மெனக்கெட்டு எழுத்தாளன் உருவாக்குகின்ற புதுப் புனைகதைகளாக இருந்தாலும் அடிப்படையில் ஒரே தன்மை கொண்டவைதாம். யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யாமல், வாழ்க்கையின் சலிப்பைக் கொஞ்சம் குறைப்பதற்கு அவை உதவுகின்றன. கதைகளை வாசிக்க மேற்கண்ட காரணம் ஒன்றே போதுமே? மென்மேலும் இன்பம் பெறுவதுதான் கதை படிப்பதன் நோக்கம். இதுவே வாழ்க்கையில் கதைகளில் ஈடுபடுவதற்குப் போதுமான நியாயம் ஆகிறது. ஆனால் வெறுமனே இன்பமடைவது என்பதற்கும் மேலாக, அதனினும் உயர்வாக ஏதோ ஒரு பண்பு இருந்தால்தானே அதனைப் பல்கலைக்கழகப் படிப்பாக, பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கமுடியும் என்று சிலர் கேட்கலாம்.
பழங்காலத்திலிருந்தே கற்பனையான அனுபவங்கள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் என்று கருதியிருக்கிறார்கள். இராமாயணம், மகாபாரதக் கதைகள், பாகவதக் கதைகள் போன்ற சமயம் சார்ந்த கதைகள் முதலாக, ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் வரை நம்நாட்டில் பரவியிருப்பதற்கு இதுவே காரணம். சாமுவேல் ரிச்சட்சன் என்னும் ஆங்கில நாவலாசிரியரிடம், டிடரோ என்பவர், 'மெய்யான வரலாறு என்பது பொய்ப் புனைசுருட்டுகள் கலந்த ஒன்றாக இருக்கிறது, ஆனால் உங்கள் கதைகளிலோ உண்மைகளே நிறைந்திருக்கின்றன' என்றாராம். ஆனால் நாம் படிக்கும் எல்லாக் கதைகளும் இவ்வாறான ஆழ்நோக்குகளை அளித்துவிடுவதில்லை. சில அவ்வாறாக உள்ளன என்பதில் சந்தேகமில்லை.
எனவே, இந்த அடிப்படையில், கதைகளை இரண்டு வகைகளாகப் பகுத்துக் கொள்ளலாம். வெறும் இன்பத்திற்கான பொழுதுபோக்குவதற்கான இலக்கியம் ஒருவகை; இதனைத் தப்பிப்பு இலக்கியம் என்று சொல்வோம். இன்னொன்று வாழ்க்கையில் சற்றே வெளிச்சத்தையும் ஈடுபாட்டையும் ஆழ்நோக்குகளையும் நல்லுணர்வு களையும் அளிக்கக்கூடிய இலக்கியம்; சுருக்கமாக இதனை வாழ்க்கை விளக்க இலக்கியம் என்று கொள்வோம். முதல் வகை இலக்கியம், நேரத்தை நல்ல விதமாகக் கழிப்பதற்கு, பொழுதுபோக்கிற்கு மட்டும் பயன்படுகிறது; வாழ்க்கைவிளக்க இலக்கியம், வாழ்க்கை பற்றிய நமது புரிந்துகொள்ளலை ஆழப்படுத்தவும் கூர்மைப்படுத்தவும் உதவுகிறது.
தப்பிப்பதை நாம் யாவரும் விரும்புகிறோம்.ஆனால் தப்பித்தல் மட்டுமே வாழ்க்கை அல்ல. தப்பிப்பு இலக்கியம் நம்மை நிஜ உலகத்திலிருந்து வெளியே கொண்டுசெல்கிறது; தற்காலிகமாக நமது தொல்லைகள் துயரங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது. வாழ்க்கை விளக்க இலக்கியமோ, தனது கற்பனை வாயிலாக, வாழ்க்கைக்குள் இன்னும் ஆழமாக நம்மைக் கொண்டுசெல்கிறது. தப்பிப்பு இலக்கியத்தின் ஒரே நோக்கம், இன்பம்தான், மகிழ்ச்சியளித்தல்தான். வாழ்க்கை விளக்க இலக்கியத்தின் நோக்கமாக இன்பத்துடன், புரிந்துகொள்ளலும் அமைகிறது.
இவற்றிற்கிடையில் வேறென்ன வித்தியாசங்கள்? ஏதோ ஓர் ஒழுக்கத்தை அல்லது அறத்தை போதிப்பது என்பது இரண்டிற்குமான வித்தியாசம் அல்ல. மெய்ம்மைகளைப் பட்டியலிடுவதும் இரண்டிற்குமான வித்தியாசம் அல்ல. மனித வாழ்க்கை ஏதோ ஒரு கூறின் மீது ஒளிபாய்ச்ச முனையும்போது கதை விளக்க இலக்கியமாக முனைகிறது. நமது இருத்தல் நிலைமைகளின் மீது ஏதோ ஓர் ஞானத்தை ஆழ்நோக்கை அளிக்க முற்படும்போது அது நிச்சயமாகவே வாழ்க்கைவிளக்க இலக்கியமாகிறது. தப்பிப்பு இலக்கியக்காரர்களை ஜாலவித்தைக்காரர்களோடு ஒப்பிடலாம். அவர்கள் அரங்கத்தில் பொத்தானை அமுக்கியவுடனே விளக்குகள் பளிச்சிடுகின்றன, மணிகள் ஒலிக்கின்றன. உருவங்கள் தோன்றி வண்ணப் பின்னணிகளில் ஆடுகின்றன. வாழ்க்கை விளக்கக் காரர்கள் இப்படியெல்லாம் செய்வதில்லை. அரங்கத்திலிருந்து உங்களை வெளியே அழைத்துவந்து 'பார், இதோ! வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது' என்கிறார்கள்.
இப்படி இருவகை இலக்கியம் இருக்கிறது என்று சொல்லும் போதே, இரண்டுவகையான வாசகர்களும் இருக்கிறார்கள் என்பதும் பெறப்படும். முதிர்ச்சி குறைந்த வாசகர்கள், முதிர்ச்சி பெற்ற வாசகர்கள் என்று அவர்களுக்குப் பெயரிடலாம். முதிர்ச்சி, முதிர்ச்சியின்மை என்பது இங்கு வாசிப்பைப் பொறுத்த விஷயம். முதிர்ச்சி குறைந்த வாசகர்கள் வாழ்க்கையிலிருந்து தப்பிக்க மட்டுமே விழைகிறார்கள். வாழ்க்கை விளக்கத்திற்காகவோ அறநெறிக்காகவோ அவர்கள் வாசிக்க முனையும்போது கூட, வாசிக்கும் விஷயம் அவர்களுக்கு இந்த உலகத்தைப் பற்றிய மனத்திற்குப் பிடித்ததொரு பிம்பத்தைக் கட்டமைத்துக் காட்ட வேண்டும் என்பது அவர்கள் விருப்பமாக இருக்கிறது.
தப்பிப்புக் கதைகளையும் வாசிப்புப் பயிற்சியின் ஆரம்பத்தில், பயிற்சிக்காக வேண்டி, அதிகம் வாசித்தால் தவறில்லை. ஆனால், வயதுமுதிர்ந்த பிறகும் பல வாசகர்களுக்கு தேவதைக் கதைகளுடைய மாற்றுகள்தான் தேவைப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொரு கதையிலும் தங்கள் குறித்த சில தேவைகள் தீர்க்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படியில்லாமல் போனால் ஏமாற்றமடைகிறார்கள். பல சமயங்களில் ஒரேமாதிரியான விஷயங்களைக் கதையில் எதிர்பார்க்கிறார்கள். மனிதர்களை மனிதச் சூழல்களில் வைத்துப்பார்க்கும் எந்தக் கதையையும் ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவர்கள் வெறும் சாகசக்கதைகள், விளையாட்டுக்கதைகள், காதல்கதைகள், குற்றக் கதைகள் எனப் பெயர்கள் கொண்ட ஒரேவிதமான கதைகளைப் படிக்கிறார்கள். ஒரே ஃபார்முலாவில் அமைந்த கதைகள் மட்டுமே அவர்களுக்கு இன்பமளிக்கின்றன.
முதிர்ச்சியற்ற வாசகர்களின் எதிர்பார்ப்புகள் எனப் பொதுவாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.
1. ஒரு நல்ல கதாநாயகன், அல்லது நாயகி முதல் தேவை. அவனு(ளு)டைய செயல்களில் வாசகர் ஒன்றி அவற்றில் பங்கேற்குமாறு இருக்கவேண்டும். அவர்கள் நல்ல பண்புகள் கொண்டவர்களாகவும் அழகாகவும் இருக்கவேண்டும்.
2. ஒரு நல்ல கதைப்பின்னல் தேவை. அதில் விறுவிறுப்பு, வேகம் இருக்கவேண்டும், ஏதேனும் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கவேண்டும். அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.
3. ஒரு மகிழ்ச்சியான விளைவு தேவை. வாசகரைத் தொல்லைப் படுத்தாமல் உலகத்தைப் பற்றிய மகிழ்நோக்கோடு இருக்கச் செய்யவேண்டும்.
4. அந்தக் கதையின் கருப்பொருள், ஏற்கெனவே அந்த வாசகர் மனத்தில் உலகத்தைப் பற்றி வைத்திருக்கும் கருத்துகளோடு ஒன்றிச் செல்லவேண்டும். இவைகளே தப்பிப்பு இலக்கியங்களின் பொதுப் பண்புகளாகவும் அமைகின்றன.
இவை எல்லாம் கதைகளில் இடம்பெறுவதில் தவறொன்று மில்லை. எத்தனை எத்தனையோ கதைகள் இப்படித்தான் எழுதப்பட் டிருக்கின்றன. ஆனால் இவற்றை மட்டுமே திட்டவட்டமாகக் கதையில் எதிர்பார்ப்பதில்தான் கோளாறு எழுகிறது. நமது வாழ்க்கை அனுபவங்களை விரிவுபடுத்துவதற்கும், நமது ஞானத்தைப் பரவலாக்கிக்கொள்வதற்கும் இவை உதவுவதில்லை. மாறாக எதிர்பார்ப்புகளை ஒரே ஃபார்முலாவிற்குள் இவை சுருக்கி விடுகின்றன.
முதிர்ச்சி குறைந்த வாசகர்கள் ஒரு கதையை, அது சொல்ல முனையும் உண்மையை வைத்து எடைபோடுவதற்கு பதிலாக, அதன் விறுவிறுப்பு, திருப்பங்கள், உத்திகள் போன்றவற்றை வைத்து எடை போடுகிறார்கள். தங்களுடைய புனைவு வாழ்க்கையை நிலைநிறுத்தும்படியான கதைகள்தாம் முதிர்ச்சியற்ற வாசகர்களுக்குத் தேவையாக இருக்கின்றன. ஜனரஞ்சகமான பத்திரிகைகள் இப்படிப்பட்ட படைப்புகளையே வெளியிட்டு வாசகர்களை சந்தோஷப்படுத்தித் தங்கள் வியாபாரத்தை நிலை நிறுத்திக்கொள்கின்றன. திரைப்படங்களும் இந்தப் பாணியையே கையாளுகின்றன.
நுணுகிப் பார்க்கும் வாசகர்கள், தப்பிப்பை முன்னிறுத்தும் கதைகளைவிட, வாழ்க்கையைக்காட்டும் இலக்கியங்களைத்தாம் விரும்புகிறார்கள். தப்பிப்பு இலக்கியத்தை அவர்கள் விரும்புவதில்லை, படிப்பதில்லை என்று கூறமுடியாது. ஆர்.எல். ஸ்டீவன்சனின் புதையல் தீவையோ, ஜானதன் ஸ்விஃப்டின் கலிவரின் பயணங்களையோ இரசிக்காத வாசகர்கள் யார்? அற்புத உலகத்தில் ஆலிசின் அனுபவங்களை இரசிக்காதவர்கள் யாரேனும் உண்டா? ஷெர்லாக் ஹோம்ஸின் துப்பறிதல்கள் எவ்வளவு சுவாரசியமாக இருக்கின்றன? இப்படிப்பட்ட வாசிப்புகள் நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கவல்லவைதாமே?
தப்பிப்பு இலக்கியங்கள் இப்போதெல்லாம் கடைகளில் விற்கப்படும் வேக உணவுகள் என்று சொல்லலாம். இனிப்புகளை, வேக உணவுகளை மட்டுமே ஒருவன் தனது முக்கிய உணவாகக்கொள்ள முடியாது. ஆனால் உணவுக்குச் சுவைகூட்ட இவை பயன்படுகின்றன. வாழ்க்கைவிளக்க இலக்கியங்கள் தினசரி நாம் சாப்பிடவேண்டிய ஊட்டச் சத்துணவு, முக்கிய உணவு போன்றவை. ஆனால் சில சமயங்களில் வேக உணவுகளையே சத்தான உணவுகள் என்று கூறி விளம்பரங்கள் விற்பனை செய்வது போல, சிலவகைத் தப்பிப்பு இலக்கியங்களும் விளக்க இலக்கியங்களின் போர்வையில் வேடமிட்டு வருகின்றன. இவைதாம் ஆபத்தானவை.
ஒரு நூலகத்தின் கதைப் பகுதிக்குள் நுழைந்து பாருங்கள். எத்தனை எத்தனையோ வகையான கதைகள். 'என்னைப் படி, என்னைப் படி என்று நம்மை ஈர்க்கின்றன. நமக்கு அவற்றில் ஒரு சிறு பகுதியை மட்டுமே படிக்க அவகாசம் இருக்கிறது. வாழ்க்கையில் எல்லா நூல்களையும் ஒருவர் படித்துக்கொண்டிருக்க முடியாது.
நமது வாசிப்பு வாழ்க்கை மிகச் சிறியது. 'Art is Long; Life is Short' என்பார்கள். வாசிப்பு வாழ்க்கையை மிகுதியான அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு, நாம் வாசிக்கும் எந்தப் புத்தகத்தையும் எப்படி மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது என்று அறிந்து கொள்ள வேண்டும். புனைகதை, புனைகதையல்லாதவை என்னும் இரு துறைகளிலும் நல்ல வாசிப்பு இருப்பது அனுபவங்களை அளித்தும், அறிவை விசாலப்படுத்தியும் மனத்தைச் செழுமைப்படுத்தும்.

