தமிழ் விசைப்பலகை

கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கு அடிப்படையாக மூன்று தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. அவை

விசைப்பலகை - Keyboard
குறியேற்றம் - Encoding
எழுத்துருக்கள் - Fonts

இவை மூன்றும் ஒருங்கே செய்யபட்டால்தான் நாம் எந்த ஒரு மொழியையும் திரையில் பார்க்க முடியும்.

விசைப்பலகை
விசைப்பலகை என்பது ஒரு கணினி அல்லது பிற மின்னணு சாதனத்தில் உள்ளீடுகளை வழங்குவதற்கான ஒரு கருவி. இது பொதுவாக ஒரு மேற்பரப்பில் அமைந்த பல விசைகளைக் கொண்டுள்ளது. விசைகளை அழுத்துவதன் மூலம், பயனர்களால் எழுத்துகள், எண்கள், குறியீடுகள் மற்றும் கட்டளைகளை உள்ளீடு செய்ய இயலும்.

குறியேற்றம்
குறியேற்றம் என்பது ஒரு தகவலை அல்லது தரவை இன்னொரு வடிவமாக மாற்றும் செயல்முறையாகும்.
கணினி ஒரு மொழியின் எழுத்துகளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த எழுத்துகளுக்கு 0,1 ஆகிய இரு எண்களைக் கொண்டு இரும எண்மான மதிப்பு கொடுக்க வேண்டும். முதலில் கணினி கண்டுபிடிக்கப்பட்டபொழுது ஆங்கில எழுத்துகளுக்கும் அரபு எண்களுக்கும் சில கட்டளைக் குறியீடுகளையும் கணினி புரிந்துகொள்ளும் வகையில் 128 இடங்களைக் கொண்ட ASCII என்ற எண்களின் மதிப்புகளைக் கொடுத்தார்கள். இவ்வாறு எழுத்துகளுக்கு இரும எண்மான மதிப்பு வழங்குவது குறியேற்றம் எனப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, A என்ற எழுத்திற்கு 8 Bit குறியேற்றத்தில் அதாவது ASCII குறியேற்றத்தில் 01000001 என்ற எண்களாகவே பயன்படுத்தப்படுகின்றன.
பிட் என்பது 7, 8, 16, 32, 64 என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு எழுத்தை எத்தனை எண்ணிக்கை கொண்ட இலக்கங்களால் உருவாக்குகிறோம் என்பதுதான் பிட்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட 7 பிட் குறியேற்றத்தில் 128 இடங்களும், 8 பிட் குறியேற்றத்தில் 256 இடங்களும், 16 பிட் குறியேற்றத்தில் 65,536 இடங்களும் உள்ளன. எவ்வாறு இந்தக் கணக்கீடுகளைச் செய்கிறோம் என்பதைப் பின்வரும் பகுதி உங்களுக்குத் தெளிவாக்கும். கணினியில் எண்கள் இரண்டின் மடங்குகளாகவே கணக்கிடப்படுகின்றன.
ASCII குறியேற்றம்
ஒவ்வோர் எழுத்துக்கும் ஒவ்வோர் எண்மான மதிப்பைக் கொடுக்க வேண்டும். இம் முறைக்குக் குறியீட்டு முறை என்று பெயர். கணினியில் மொழியைப் பயன்படுத்த விழைவோர் ஒவ்வொரு மொழிக்கும் உரிய குறியீட்டு முறையைக் கணினியில் வடிவமைக்க வேண்டும்.
இவ்வகையில் ஆங்கிலத்தைக் கணினியில் காண்பதற்கு உருவாக்கப்பட்டது தான் அமெரிக்கத் தரக் குறியீட்டின் தகவல் உள்மாற்றம் ASCII (American Standard Code for Information Interchange) என்று அழைக்கப்படுகிறது.

TAM, TAB, Unicode
1999-ல் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ் 99 விசைப்பலகையின் தட்டச்சு முறையில் தமிழ் தனிமொழி வடிவம் (TAM-Tamil Monolingual) மற்றும் தமிழ் இருமொழி வடிவம் (TAB-Tamil Bi-Lingual) என்று இரண்டு வழியிலான எழுத்துருக்கள் இருக்கின்றன. தமிழ் தனிமொழி வடிவ எழுத்துருக்களை தமிழ் மொழி மட்டும் தட்டச்சு செய்வதற்கும், தமிழ் இருமொழி வடிவம் இடையிடையே ஆங்கிலம் மொழியிலும் சேர்த்து தட்டச்சு செய்வதற்கும் உதவுகிறது.
உலகம் முழுவதும் அனைத்து மொழிகளையும் ஒன்றிணைக்க, ஒருங்குறியக் கூட்டமைப்பு (Unicode Consortium) என்ற அமைப்பு இயங்கி வருகிறது. தமிழ் மொழிக்கும், இந்த ஒருங்குறி எழுத்துகள் உருவாக்கப்பட்டிருக்கிறன.

TACE
யுனிகோடு தமிழ்க் குறியேற்றத்தில் உயிர் எழுத்துகள் (12), அகரமேறிய மெய் எழுத்துகள் (18), ஆய்தம் (1) ஆக 31 எழுத்துகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. எனவே பிற உயிர்மெய் எழுத்துகளை உள்ளிடுவதற்குத் தனியொரு மென்பொருள் தேவைப்படுட்டது.
இதனைத் தவிர்க்கத் தமிழில் உள்ள 247 எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்த எழுத்துகளையும் சேர்த்து 313 இடங்களைக் கொண்டதாகத் தமிழ் அனைத்து எழுத்துக் குறியேற்றம் (Tamil All Character Encoding TACE) என்ற ஒன்றினை 16பிட் குறியேற்றத்தில் கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்டது.

எழுத்துருக்கள் (Fonts)
எழுத்துரு என்பது ஒரு சீரான ஒழுங்கில் உள்ள மொத்த வடிவங்களை உள்ளடக்கிய தொகுப்பாகும். ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைவில் தொகுக்கப்பட்ட ஒரு மொழியில் எழுத்துகளுக்கு வழங்கும் வரிவடிவங்களின் தொகுப்பு எழுத்துரு ஆகும். குறியேற்றத்தின் அடிப்படையில் தமிழில் டேம் எழுத்துருக்கள், டேப் எழுத்துருக்கள், யுனிகோடு எழுத்துருக்கள். டேஸ் எழுத்துருக்கள் எனப் பல வகைகளில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இவை நேர் எழுத்து, சாய்வெழுத்து எனப் பல்வேறு வடிவங்களில் பயன்பட்டு வருகின்றன. இவ்வெழுத்துருக்கள் ஒரே மொழியில் பலபேரின் கையெழுத்துகள் போன்றதாகும்.

எழுத்துரு வகைகள்
  • உண்மை வடிவ எழுத்துரு (TTF-True Type Font)
  • திறந்த வடிவ எழுத்துரு (Open Type Font)
  • ஒருங்குறி எழுத்துரு (Unicode Font) 
  • திறந்த உண்மை வடிவ எழுத்துரு (Open True Type Font)
  •  தெளிந்த வடிவ எழுத்துரு (Clear Type Font)

தமிழ்த் தட்டச்சு மென்பொருள்கள்
  • அழகி
  • இ-கலப்பை
  • கம்பன்
  • இனிய தமிழ்
  • தமிழ்நாடு அரசு விசைப்பலகை
  • செல்லினம்
  • பொன்மடல்
  • லிப்பிகார்
தமிழ்த் தட்டச்சு முறைகள்
கணினியில் தமிழைத் தட்டச்சு செய்யப் பல மென்பொருள்கள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தி விசைப்பலகையில் உள்ள விசை(ஆங்கில எழுத்து) ஒவ்வொன்றையும் அழுத்தினால் எந்தத் தமிழ் எழுத்து வரவேண்டும் என்று தீர்மானிப்பதுதான் இந்தத் தட்டச்சு முறை ஆகும். இதனையே தமிழ் விசைப்பலகை என்கிறோம்.

1. தமிழ் ஒலிபெயர்ப்பு - Tamil Phonetic
2. ஆங்கில ஒலிபெயர்ப்பு - Roman Tamil
3. பழைய தட்டச்சு - Old Typewriter
4. புதிய தட்டச்சு - New Typewriter
5. பாமினி - Bamini
6. மாடுலர் - Modular
7. அஞ்சல் - Anjal
8. இன்ஸ்கிரிப்ட் - Inscript
9. தமிழ்99 - Tamil99

மிதவை விசைப்பலகை
மிதவை விசைப்பலகை என்பது ஒரு வகையான விசைப்பலகை ஆகும், இது கணினியின் திரையில் மிதக்கும் இயல்புடையவை. இதில் தேவைக்கேற்ப அளவு மற்றும் வடிவத்தை மாற்றி அமைக்கலாம். மிதக்கும் விசைப்பலகை கையாளுவதற்கு எளிமையாகவும் பயன்பாட்டிற்கு வசதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டு: விண்டோஸ் திரைப்பலகை, ஸ்விப்ட் கி, ஜி-போர்டு, ஆப்பிள் விசைப்பலகை