பாடாண் திணையில் "ஆற்றுப்படை"

பாடாண் திணையில், மன்னர்களின் வள்ளல் தன்மையைக் காட்டும் துறைகள் ஆற்றுப்படை என்ற பகுதிக்குள் அடங்குகிறது. ஆற்றுப்படை என்றால், வழிகாட்டுதல் என்று பொருள்.

வள்ளல்களிடம் சென்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்திப் பரிசுகள் பெற்று, செல்வத்துடன் திரும்பும் கலைஞர்கள் (பாணர், கூத்தர், பொருநர், விறலியர்), வழியில் வறுமையில் வாடும் தங்கள் இனத்தாரைப் பார்க்கும்போது, "நீங்கள் அந்த வள்ளல்களிடம் சென்றால், வறுமை நீங்கி வளம் பெறுவீர்கள்" என்று வழிகாட்டுவார்கள். இதுவே ஆற்றுப்படை ஆகும்.

1. பாணாற்றுப்படை

பாணர்கள் என்றால் இசைக்கலைஞர்கள். வள்ளல்களிடம் பரிசு பெற்று வரும் ஒரு பாணன், வழியில் வறுமையில் உள்ள மற்றொரு பாணனைப் பார்த்து, "யானைகள் நடமாடும் இந்தப் பாதையைக் கடந்து அந்த வள்ளலிடம் சென்றால், அவர் உனக்குப் பொற்றாமரை மலரைப் பரிசாக அளித்துச் சிறப்பிப்பார்" என்று வழிகாட்டுகிறான்.

2. கூத்தராற்றுப்படை

கூத்தர்கள் என்றால் ஆடல் கலைஞர்கள். வள்ளலிடம் பரிசு பெற்ற ஒரு கூத்தன், "விறலியரின் கூத்துக்குத் தலைவனே, நீ தவறாமல் அந்த வள்ளலிடம் செல். மேகத்தையும் மிஞ்சும் அவருடைய கொடைத்தன்மையை அனுபவித்து, நீயும் வாரி வாரிச் செல்வத்தைக் கொண்டு வரலாம்" என்று மற்றொரு கூத்தனுக்கு வழிகாட்டுகிறான்.

3. பொருநராற்றுப்படை

பொருநர்கள் என்றால் வேறு ஒருவரைப்போல் வேடமணிந்து, பறை இசைத்து ஆடுபவர்கள் ஆவர். தெருக்களில் திரியும் மற்றொருப் பொருநனைப் பார்த்து, பரிசு பெற்ற பொருநன், "நீ போரில் வல்லமை கொண்ட அந்த வள்ளலிடம் சென்றால், அவர் கொம்பும், வலிய காலும் கொண்ட யானைக் கூட்டத்தையே பரிசாகத் தருவார்" என்று கூறுகிறான்.

4. விறலியாற்றுப்படை

விறலி என்பது கூத்தர் எனப்படும் நடனக் கலைஞர்களின் குலத்தைச் சேர்ந்த பெண்ணைக் குறிக்கும். விறலி தன் மனதிலுள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆடல் கலைஞர். பரிசு பெற்று வரும் விறலி, மற்றொரு விறலியிடம், "நீ படைவலிமை கொண்ட அந்த வள்ளலின் புகழைப் பாடிச் சென்றால், அவர் தரும் அணிகலன்களால் பூங்கொடி போலப் பொலிவு பெறுவாய்" என்று வழிகாட்டுகிறாள்.