போட்டிபோட்டுப் பெறும் வெற்றி மட்டுமின்றி, இயல்பாகவே பெறும் மேம்பாட்டையும் வெற்றி எனலாம். இந்த மேம்பாட்டை முல்லை என்று குறிப்பிடுவர். ஒரு மன்னன், சான்றோர், வீரன் என பலரும் அடையும் சிறப்புகளை முல்லை என்ற பகுதி விளக்குகிறது. இப்பகுதியில் 12 துறைகள் இடம்பெறுகின்றன.


அரச முல்லை (அரசனின் மேம்பாடு)

அரசனின் மேம்பாட்டைக் கூறும் பகுதி. போர்க்களத்தில் பகைவர்களை அழிக்கும் நீண்ட வேலை உடையவனும், உலகைக் காப்பவனும் ஆன அரசனின் இயல்புகளை இது விளக்குகிறது.

குற்றமில்லாமல் ஆட்சி செய்து, வெற்றி முரசு முழங்கும்படி இருக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் செங்கோன்மை காட்ட வேண்டும். எல்லா உயிர்களுக்கும் நன்மை தரும் கதிரவன்போல் நடந்து கொள்வது அரசனின் கடமை.

பார்ப்பன முல்லை (பார்ப்பனரின் நடுவுநிலைமை)

பார்ப்பனர்களின் நடுவுநிலைமையைப் பற்றிக் கூறும் பகுதி. இரண்டு பகை மன்னர்களின் பகையை நீக்கி, அவர்களை நண்பர்களாக்க நடுவுநிலை தவறாமல் சமாதானம் பேசும் பார்ப்பனரின் சிறப்பை இது எடுத்துரைக்கிறது.

அறம் வழுவாத அந்தணன் சமாதானம் பேசச் சென்றால், போரில் வெற்றி பெறாமல் திரும்ப மாட்டோம் என்ற கொள்கையுடைய மன்னர்களும் போரை நிறுத்தி திரும்புவர்.

அவைய முல்லை (அவையில் உள்ள சான்றோரின் சிறப்பு)

அவைக்களத்தில் உள்ள சான்றோர்களின் மேம்பாடு. குற்றம் நீங்கும்படி நடுநிலையோடு தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை இது குறிக்கிறது.

குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, பொறாமை இன்மை, ஆசை இன்மை ஆகிய எட்டுப் பண்புகளையும் ஒருங்கே பெற்றவர்கள் அறங்கூறவையத்தார். அவர்கள் வழக்கிடுவோரிடம் கேள்வி கேட்டு, உண்மையை ஆராய்ந்து, தீர்ப்பு வழங்குவது கடமை.

கணிவன் முல்லை (சோதிட வல்லுநரின் சிறப்பு)

சோதிட வல்லுநரின் மேம்பாடு. காலக் கணிதன் என்றும் இவர்களைக் குறிப்பிடுவர்.

தன் உடலைப் பேணுவதைப் போலக் கல்வியைப் பாதுகாத்து, மக்கள் வருந்தாதபடி வானிலும் உலகிலும் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தவறில்லாமல் கணித்துக் கூறுபவன் கணிவன்.

மூதின் முல்லை (பழைய வீரக் குடியின் சிறப்பு / பெண்களின் வீரச் சிறப்பு)

பழமையான வீரக்குடியில் பிறந்த பெண்களின் வீரத்தைப் பற்றிக் கூறுவது.

தன் நாட்டை நோக்கிப் பகைப்படை வருவதைக் கண்ட வீரத்தாய், பால்குடித்துக்கொண்டிருக்கும் தன் பிள்ளையிடம் வேலைக் கொடுத்து, தங்கள் முன்னோர்கள் வீரமரணம் அடைந்த நடுகற்களைக் காட்டி, போருக்குச் செல்லுமாறு அனுப்புவாள்.

ஏறுஆண் முல்லை (சினம் குறையாத ஆண்மைத் தன்மையின் சிறப்பு)

பகைவரைச் சந்திக்காதபோதும் சினம் குறையாமல் இருக்கும் வீரக்குடியின் சிறப்பைக் கூறுகிறது. "என் தந்தை போரில் இறந்து நடுகல்லாக நிற்கிறார். என் கணவனும் இறந்தான். என் அண்ணன்மார்களும் போரிட்டு மாண்டனர். என் மகனோ பின்வாங்காதவன் போல நின்று, அம்புகள் பட்டு முள்ளம்பன்றி போல கிடந்தான்" என்று வீரத்தாய் கூறுவதாக இது அமைகிறது.

வல்லாண் முல்லை

ஒரு வீரனின் குடிச் சிறப்பு, ஊரின் சிறப்பு, வீர இயல்பு ஆகியவற்றைப் பெருமையாகப் பேசுகிறது. போர்க்களத்தில் தன் அரசனுக்குத் துணையாக நின்று மார்பில் வேல் பட்டு வெற்றி பெற்றவன் இவன் என்று வீரனை உயர்த்திப் பேசும்.

காவல் முல்லை (அரசனின் காவல் சிறப்பு)

அரசனின் காவல் சிறப்பைப் பற்றிக் கூறுவது. கடல் சூழ்ந்த உலகைக் காக்கும் அரசனின் காவல் சிறப்பு இல்லாவிட்டால் அறங்கூறும் அவையத்தாரும் செயல்பட முடியாது. அரசன் தந்தையைப் போல வரி வாங்கி, மக்களைத் தீமையிலிருந்து காக்க வேண்டும் என்று சான்றோர் எடுத்துரைப்பதும் இதில் அடங்கும்.

பேர்ஆண் (அரசனின் முல்லை)

முல்லை வீரமிக்க அரசன் போர்க்களத்தில் வென்ற சிறப்பைப் பற்றிக் கூறுகிறது. பகைவரின் யானைப்படை ஓடும்படி வாள் கொண்டு போரிட்டு, போர்க்களத்தைத் தனக்கு உரியதாக வென்றான் என இது விளக்குகிறது.

மற முல்லை (மறவனின் வீர மேம்பாடு)

அரசன் பரிசுகளைக் கொடுத்தாலும், அதைப் பெற்றுக்கொள்ளாமல் பகைவரை வெல்வதிலேயே குறியாக இருக்கும் வீரனின் சிறப்பை இது காட்டுகிறது. அரசன் கொடுத்த பரிசுகளைப் பெற மறுத்து, தன் கடமையாகிய போரிடுவதையே பெருமையாகக் கருதும் வீரனின் உயர்நிலையை இது விளக்குகிறது.

குடை முல்லை (வெண்கொற்றக் குடையின் சிறப்பு)

அரசனின் வெண்கொற்றக் குடையின் சிறப்பைச் சொல்வது. போரினைத் தடுத்த வலிமையான தோள்களை உடைய மன்னனின் வெண்கொற்றக் குடையைப் புகழ்வது.

அந்த வெண்கொற்றக் குடைக்கு வானமே துணியாகும், கதிரவனே வட்டமாகும், மழை மேகமே சுற்றிலும் இருக்கும் மாலையாகும், மேரு மலையே காம்பாகும் என்று மிகைப்படுத்திப் புகழ்வது இந்தத் துறை.