கவிதையின் அடிப்படைகள் (நான்கு அடிப்படைகள்)

கவிப்பெருக்கும் கலைப்பெருக்கும் மேவுதல் வேண்டும் படைப்பாளியின் உள்ளத்தில், இது அலைதுளும்பிப் பாய வேண்டும் இவ்வாறு கவியுள்ளம் நிரம்பிவர, அவன் கவிஞனாக எழுகிறால் என்றால், அவனுக்குரிய உகந்த சூழ்நிலையில் கவிதை எழுதத் தொடங்குதற்குரிய நான்கு அடிப்படைகள் கவனிக்கத் தக்கனவாக இருக்கின்றன.

முதலில் ஒரு சமுதாயத் தேவை: ஓர் அறைகூவல்! ஒரு தீவிர உந்துதல்! காட்டாக இந்திய தேசிய எழுச்சி, மக்கள் விடுதலை பற்றிப் பாடுவதற்குரிய ஒரு சமுதாயத் தேவை, பாரதியார்க்கு இருந்ததல்லவா அதுபோன்றதொரு தேவை, ஓர் உணர்வு!  கவிதையாலன்றி அதனைத் தம்மால் சமாளிக்க முடியாது என்று - ஒரு சுவிஞர் என்ற முறையில் எண்ணினாரே அதுபோன்ற ஒருதேவை. அதுபோல், 1975/76 இல் அன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி கொண்டுவந்த நெருக்கடிக்கால அவசரநிலைப் பிரகடனத்தையும் அதனால் ஏற்பட்ட அரசியல் சமூக அவலங்களையும் எதிர்த்து எழுச்சியூட்ட, பாட ஒரு சமூகத் தேவை அன்று இருந்தது. சில கவிஞர்கள் அதனை உணர்ந்தார்கள்; எழுதினார்கள். இன்குலாப் முதலிய சில கவிஞர்கள், மக்களிடம் சென்று உரக்கப் பாடினார்கள். இதைத்தான் படைப்பிற்குரிய ஒரு சமூகத் தேவை என்கிறோம். சமுதாயத்தில் நீங்கள் வாழும் குறிப்பிட்ட காலகட்டத்தில், நாடிபிடித்துப் பார்த்தால், அக்கறை கொண்ட உங்களுக்கு அது தெரியும். சமுதாயத்தின் நெளிவுகளிலும் நெருக்கடிகளிலும், சச்சரவுகளிலும் சவுகரியங்களிலும் சலனமோ எதிர்வினையோ கொள்ளாத, அபிப்பிராயம்கூட இல்லாத மனிதர்கள் இருப்பார்களா, என்ன? அதிலும் கவிஞர்கள்?

இரண்டாவதாக இலக்கு. யாரிடம் உங்களுடைய கவிதை செல்லப்போகிறது - அதன் தேவை என்ன என்பது பற்றிய உங்களின் திட்டம் பற்றியது, இது சமூகத் தேவை பற்றிய விழிப்புணர்வு உங்களுடைய சமூக இருப்பின் அடிப்படையில் உங்களிடம் இருக்கிறது. அல்லது அதனைத் தேடிப் பெற்றிருக்கிறீர்கள். சரி அதனை யாரோடு பகிர்ந்துகொள்ளப் போகிறீர்கள்; யாரிடம் எதிர்வினை கொள்ளப்போகிறீர்கள்: எந்த மாதிரியான எதிர்வினையை எதிர்பார்க்கிறீர்கள்? அதனைச் சரியாக அனுமானித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் எழுத்து, அதனைச் சார்ந்து அதற்கேற்றாற்போன்று அமைய வேண்டுமல்லவா! சமூக உணர்வு இருக்கிறது, சமூக மாற்றம் குறித்த ஓர் உத்வேகம் இருக்கிறது, அதற்கான நிலைப்பாடு இருக்கிறது. அதனை யாரிடம் கொண்டு செல்லப் போகிறீர்கள் அதுதான் இலக்கு என்றால், உங்கள் எழுத்து அதற்கானதாக இருக்கவேண்டுமல்லவா! உங்கள் மொழி அதற்கானதாக இருக்கவேண்டுமல்லவா!

மூன்றாவதாகக் கவிதைக்குரிய மூலப்பொருள் சொற்கள். தேவையை நிறைவு செய்வனவாக உள்ள சொற்கள் வழிவழியாக வந்த மொழியில், புதிது புதிதாகத் தன்னை ஆக்கிக்கொள்ளும் மொழியில் தினம்தினம் புழங்கும் சொற்கள், செதுக்கியும் புதுக்கியும் வடித்தும் வரைந்தும் பழகிக் கொண்ட சொற்கள், சப்தத்திலும் மவுனத்திலும் பொதிந்துகிடக்கும் சொற்கள் - இப்படிச் சொற்கள் உங்கள் முன் கிடக்கின்றன ஏராளமாய். அவை, உங்கள் தேவைக்கு ஏற்ப இணைந்து பிணைந்து கவிதையாகின்றன. சோதிமிக்க உங்கள் கவிதைக்கு மேலும் மேலும் வளம் சேர்க்க, உங்கள் சொற்களஞ்சியங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சொற்களைக் காட்டுகிறீர்கள், சொற்கள் கவிதையைக் காட்டுகின்றன. கவிதை உங்களைக் காட்டுகின்றது.

நான்காவதாக உத்திகளும் வழிமுறைகளும். எந்த அளவிற்கு யாப்பு மரபைப் பின்பற்றப் போகிறீர்கள்? புதுப்பிக்கப்பட்ட யாப்பா? அல்லது முற்றிலும் யாப்பைப் புறக்கணிக்கப் போகிறீர்களா? எதுவாயிருந்தாலும் ஒரு பொதுவான வடிவம் என்பது ஏற்கனவே முதலிலேயே தீர்மானிக்கப்படுகிற ஒன்றுதான். ஆனால், உங்களின் சமூகத்தேவைக்கும். இலக்கிற்கும் உங்கள் பயிற்சிக்கும் ஏற்பத்தான் வடிவத்தைத் தேர்ந்தெடுப்பதும் அமைகிறது. பொதுவான வடிவமைப்பைத் தவிரவும் உள்ளுக்குள்ளே நுண்ணளவில் செய்யப்படுகிற உத்திமுறைகளும் மற்றும் கடைசிநேரத்துச் சீரமைப்புக்களும், சிறுசிறு நகர்த்தல்களும், மிகவும் முக்கியமானவை.

எதுகை, மோனை, ஒழுங்கோசை, சந்தம். இவை உங்களுடைய கவிதை வடிவத்தை மட்டுமல்ல, கவிதைக்குரிய இலக்கையும் தீர்மானித்து விடுகின்றன. சந்தம் என்பதன் தேவை கவிதையைத் திரும்பத்திரும்ப வாசிக்கிறபோது எவ்வளவு அவசியம் என்பது தெரியவரும். அதுபோலத் தான் படிமம். இன்னும் இதுபோல கவிதை வடிவத்திலுள்ள வரிகள், திடீர்ச் சுழற்சிகள், தொடரிலும் சொல்லிலும் இறுதியாகச் சேர்க்கும் அணிகள், தலைப்புகள் இவையெல்லா வற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவையெல்லாம் திடீரென்று வருவன அல்ல; வாய்பாடாகவோ இயந்திர கதியாகவோ வருவன அல்ல. பல 'முன்னோடிக்' கவிதைகளின் மீதான உன்னிப்பான கவனிப்புகள், பயிற்சிகள், 'எழுதுவது'ஏன் என்ற தேவை பற்றியும் யாருக்காக, என்ன செய்வதற்காக என்ற இலக்கு பற்றியும் கொள்கிற சரியான நிலைப்பாடுகள் மற்றும் தொடர்ந்து பல ஆண்டுகளாக உழைக்கும் உழைப்பு எனும் இவற்றின் அடிப்படையிலே பெறப்படுவன இவை.