கவிதையின் நடை என்பது, மொழியமைப்பின் ஒரு பகுதி மட்டும் அன்று; தொடர்புபட்ட பல கூறுகளின் ஒன்றிணைந்த செயல்பாடு. பொதுவாகக், கவிதைமொழியின் தளம் ஒரு ஒட்டுமொத்தமான நிலையில் அமைவது ஆகும்.
சொல் இன்றையக் கவிதையில் முக்கிய கவனிப்பைப் பெற்றிருக்கிறது என்பது உண்மையே. ஆனாலும், சொல்லியலால் நடைபெற்றியலும் கவிதையின் இயக்கம், அதனுடைய தொடரியல் பண்பாகவே அமைகிறது. தொடர் என்பது வா சாப்பிட்டு போ என்ற மாதிரியாக ஒரு சொல்லாக இருக்கலாம். 'நான் வந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறேன்' என்று ஒரு முறைமைக்குட்பட்ட பல சொல்களின் கலவையாக இருக்கலாம் மொழியின் அமைப்பு என்பது தொடரியலை மையமிட்டது என்று தொல்காப்பியம் கருதுகின்றது.
சொல் என்பதைத் தனித்த ஒரு கூறாகப் பார்க்காமல் தொடரியலின் ஒரு கூறு என்று பார்க்க வேண்டும். நோஓம் சாம்ஸ்கி (Noam Chomsky) தனது மொழியாராய்ச்சியைத் தொடரமைப்பு என்ற நிலையிலிருந்தே தொடங்குகிறார். தொடரமைப்பின் விதிகளையும் அவற்றிற்குள்ளே புதிது புதிதாகத் தொடர்கள் உருவாகிற சாத்தியப் பாடுகளையும் அவற்றின் திறன்களையும் மாற்றிலக்கணக் கோட்பாடு (Transformational Generative Grammar) என்ற முறையில் கூறுகிறார்.
மொழியின் இயங்குதிறன் மற்றும் அதன் தளமாற்றத்திற்கான அடிப்படை, தொடரமைப்பை முதன்மையாகக் கொண்டே நிகழ்கிறது. இந்தத் தொடரமைப்பு, ஒரே சீரானது அன்று. மாறாக, மாற்றாக்கம் பெற்றுப் புதிது புதிதாய்ப் பிறப்பெடுக்கின்றது ஆகும்.
விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்.
'காவல்' எனும் தலைப்புடன் கூடிய மு. மேத்தாவின் கவிதை, இது காதல் உணர்வின் ஒரு கோலமாகவோ, தனிமையுணர்வாகவோ, சிறை வாழ்வு பற்றிய மனநிலையாகவோ, நிஜத்திற்கும் கற்பனைக்குமான ஓர் இடைவெளியாகவோ இக்கவிதையை வாசிக்கலாம்.
உண்மையில், இந்த வாக்கிய அமைப்பு நடைமுறைப் பேச்சு வழக்கில் உள்ளதுதான். இதனைத்தான் கவிதை தனக்குரியதாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. எழுத்துவழக்கில், பொதுவாக இலக்கண வரையறைகளோடு எழுத வேண்டும் என்ற மனநிலை இருக்கிறது. அதனை மீறுகிறபோது ஒரு வித்தியாசமான மொழிநடை வந்து சேர்கிறது.
கவிதையின் நோக்கங்களுக்கு ஏற்ப, வாக்கியத்தில் பல மாறுதல்களைச் செய்வது என்பது ஒரு தேவை. இத்தகைய தேவையைக் கவிஞர்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். சொற்களில் புதிய வடிவங்களைக் கொண்டு வருவதைவிடப், புதிய சொற்சேர்க்கைகளையும் தொடர் நிலைகளைக் கொண்டு வருவதற்கு வாய்ப்புக்களும் தேவைகளும் அதிகம்.
கவிதையின் இறுதி முக்கியமானது. கவிஞர்கள் தனது குரலை (இறுதியாக) கவிதையில் விட்டுப் போகுமுன் முத்தாய்ப்பாக, ஏதாவது வைத்துவிட்டுப் போகவே நினைக்கிறார்கள்.
எனக்குக் கவிதை
அப்பாவுக்கு வெற்றிலை
எப்போதும் ஒரே பக்குவத்தில்
இரத்தச் சிவப்பை
உடுத்திவிடுகிறது அவர் நாக்கு
இறுதிவரிகளுக்கான வார்த்தைகளைத்
தேடிக் கொண்டிருக்கிறேன் நான்.
என்று யூகபாரதி சொல்லியிருப்பது. எல்லோருக்குமானதுதான். சொல்ல வந்தது எதுவும் முடிந்துவிடுவதில்லை. எனவே கவிதை வரிகள் முடிகிறபோது முடியாதது போன்ற ஒரு தோற்றத்தை, பிரமையை விட்டுச்செல்லுவது ஓர் சிறந்த உத்தி.
சரியாகச் சொல்லப்போனால், கவிதையென்பதே ஒரு வாக்கியம் தான். கவிதை எப்படி எப்படியிருக்க, என்ன சொல்ல விரும்புகிறதோ, அப்படியப்படித்தான் அதன் வாக்கியமும் இருக்கிறது. இன்றையத் தமிழ்க் கவிதையில் வாக்கிய அமைப்பு, ஒரே சீரானதாகவோ இல்லை. வித்தியாசமான நிலைகளைக் கொண்டிருக்கிறது; எனவே அது சிறப்பான கவனத்தைப் பெற்றுள்ளது.