சித்தர் பாடல்கள் - பாம்பாட்டி சித்தர் (Bharathiar University UG Semester 2 - Tamil)

பாம்பாட்டி சித்தர் பாடல்கள்

(பொருளாசை விலக்கல்)

நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின் பவற்றாற் கொள்பய னென்னோ
கூத்தன் பதங் குறித்துநின் றாடாய் பாம்பே.

நாடு, மக்கள், வீடு, சுற்றம் மற்றும் சேர்த்து வைத்த நல்ல பொருட்கள் என எவையும் நடுவனான எமன் வரும்போது அருகில்கூட வராது. அதுபோலவே உடலை விட்டு ஆவி பிரிந்த பின்பு மேற்கூறிய எவற்றாலும் நமக்கு பயன் எதுவும் கிடையாது. இவ்வாறு நிலையானதல்லாத அவற்றை நினைத்து இருப்பதை காட்டிலும் நிலையான கூத்தனான இறைவனின் பதத்தை நினைத்து ஆடு பாம்பே.

யானைசேனை தேர்ப்பரி யாவு மணியாய்
யமன்வரும் போதுதுணை யாமோ அறிவாய்
ஞானஞ்சற்று மில்லாத நாய்கட் குப்புத்தி
நாடிவரும் படிநீநின் றாடுபாம்பே.


யானை, குதிரை, தேர் மற்றும் காலாட்படை ஆகிய நாற்படைகளும், ஆடை அணிகலன்களும் எமன் வரும்போது துணையாக வருவதில்லை. மாறாக இறைவன்பால் நாம் கொண்ட பற்றும், நாம் செய்த அறச் செயல்களும் உள்ளார்ந்த ஞானமும் மட்டுமே இவ்வாறான காலங்களில் துணையாக வரும் என்று ஞானம் இல்லாத நாய்களைப் போல் அறிவிலிகளாக உள்ள மனிதர்களுக்கு நன்கு உணரும்படி கூறி இந்த ஞானத்தை நாடி வரும்படி ஆடு பாம்பே.

(சரீரத்தின் குணம்)

நீரில்எழும் நீர்க்குமிழி நிலைகெடல் போல
நில்லாது உடல் நீங்கிவிடும் நிச்சயம் என்றே
பாரிற்பல உயிர்களைப் படைத்த வன்தனைப்
பற்றவேநீ பற்றித் தொடர்ந்து ஆடுபாம்பே!

நீர்மேல் எழும் நீர்க்குமிழி நிலையில்லாமல் நொடிப்பொழுதில் தோன்றி மறைந்து விடும். அதே போல இந்த உடலும் ஒருநாள் மறைந்து விடும். இந்த உண்மையை மனதில் கொண்டு அனைத்து உயிர்களையும் படைத்தவனான எம்பெருமான் சிவனின் பதத்தை நிலையாக பற்றிக்கொள்ள வேண்டுமாய் நீ தொடர்ந்து ஆடு பாம்பே.

நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங் கழுவினும் அதன் நாற்றம் போமோ?
கூறும் உடல் பலநதி யாடிக் கொண்டதால்
கொண்டமலம் நீங்காதென்று ஆடுபாம்பே!

நாறுகின்ற மீனை பலதடவை நல்ல நீரால் கழுவினாலும் அதன் நாற்றம் போகாது. அது போல பலபேரால் கூறு கூறாக கொண்டு வரப்பட்ட இந்த உடலினால் செய்த பாவத்தைப் போக்க என்னதான் புனித நதிகளில் நீராடினாலும் பாவங்கள் தண்டனைக் குரியவையே என்று நின்று ஆடு பாம்பே.

(அகப்பற்று நீக்கல்)

காடுமலை நதிபதி காசி முதலாய்க்
கால்கடுக்கஓடிப்பலன் காணலாகுமோ
வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே
வேதாந்தத் துறையினின் றாடாய் பாம்பே!

காடு, மலை, புனித நீராடுதல், கோயில்கள் என பல இடங்களுக்குக் கால்கடுக்க அலைவதால் பயன் ஒன்றுமில்லை. முத்திநிலை பெற வேண்டுமாயின் வேதாந்தத்தின் வழி நடக்க வேண்டுமென்று நீ நின்று ஆடு பாம்பே.